'ரூ.6 கோடி தராவிட்டால் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன்' நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் திரைப்பட தயாரிப்பாளர் கைது- விழுப்புரம் போலீசார் அதிரடி

ரூ.6 கோடி தராவிட்டால் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிடுவேன் என்று கூறி நடிகை அமலாபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-30 16:53 GMT


கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கங்கரப்பாடி பகுதியை சேர்ந்தவர் பால்வர்க்கீஸ் மகள் அமலாபால் (வயது 29). இவர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

தமிழ் திரையுலகில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். பின்னர் தெய்வதிருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

நெருக்கமான பழக்கம்

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் நடிகை அமலாபாலுக்கு, திரைப்பட தொழில் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சுந்தர்ஜித் சிங்கின் மகன் பவ்நிந்தர்சிங் தத் என்கிற பூவி (வயது 36) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்த பழக்கத்தின் அடிப்படையில் பவ்நிந்தர்சிங் தத்தின் குடும்பத்தினரிடமும் அமலாபால் நெருங்கிய நட்புடன் பழகி வந்துள்ளார்.

திரைப்பட நிறுவனம்

இந்த நட்பின் அடிப்படையில் பவ்நிந்தர்சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடிகை அமலாபால், திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்நிறுவனத்துக்காக கடந்த 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகில் உள்ள பெரியமுதலியார்சாவடி பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கு திரைப்பட தொழில் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இதற்காக அமலாபாலிடம் ரூ.15 லட்சத்தை அவர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி புதிதாக ஹெர்பல் பவுடர் நிறுவனம் தொடங்கவும் மேலும் ரூ.5 லட்சத்தை பவ்நிந்தர்சிங் தத்துக்கு அமலாபால் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுதவிர அந்த வீட்டுக்கு முன்பணமாக ரூ.1.20 லட்சத்தை அமலாபால் வழங்கியுள்ளார்.

கருத்து வேறுபாடு

இதனிடையே பவ்நிந்தர்சிங் தத்தும், அமலாபாலும் இணைந்து ஒரு திரைப்படத்தை எடுக்க முடிவு செய்து கடாவர் என்ற திரைப்படத்தை அமலாபால் தயாரித்துள்ளார். அந்த படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அப்படம் சமீபத்தில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தை தயாரிக்க நடிகை அமலாபால் ரூ.3.75 கோடியை முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது நடிகை அமலாபாலுக்கும் பவ்நிந்தர்சிங் தத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இதனிடையே இப்படத்தை வெளியிடக்கூடாது என பவ்நிந்தர்சிங் தத், சென்னை ஐகோர்ட்டு வழக்கு தொடர்ந்தார். இதில் அமலாபாலின் விளக்கத்தை கேட்ட கோர்ட்டு, அப்படத்தை வெளியிட அனுமதியளித்ததன்பேரில் அந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

ரூ.6 கோடி கேட்டு மிரட்டல்

பவ்நிந்தர்சிங் தத்துடன் அமலாபால் நெருங்கி பழகி வந்ததால் இருவருக்கும் ராஜஸ்தானில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், ஆனால் அமலாபால் தொடர்ந்து படப்பிடிப்பு உள்ளதால் தற்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாம் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை வெளியிட வேண்டாம் எனவும் அமலாபால் கேட்டுக்கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவ்நிந்தர்சிங் தத், அமலாபாலிடம் சென்று தனக்கு ரூ.6 கோடி தரவேண்டும் என்றும், இல்லையெனில் அந்த புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

12 பேர் மீது புகார்

இதுகுறித்து அமலாபால், தனது தனி உதவியாளரான சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மூலமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரில், பவ்நிந்தர்சிங் தத்தும், அவரது உறவினர்களான புதுடெல்லியை சேர்ந்த ஜூல்பிகர், அனில்குமார், கரன்கனோஜலா, மித்லேஷ்குமார், பீகார் மாநிலத்தை சேர்ந்த வில்பேஹரா ரன்ஜித்தா, புதுச்சேரி மாநிலம் வைத்திக்குப்பத்தை சேர்ந்த பிரைன்சித்தார்த்தா இங்லே, சென்னை மேற்கு கே.கே. நகரை சேர்ந்த ஹேபாஸ்கர், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்த இந்திரஜித்சிங், நீலம்கரூர், கங்கதீப்கர், ஹர்பித்சிங் ஆகிய 12 பேரும் தன்னை ஏமாற்றியதுடன், ரூ.6 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வருவதோடு தன்னுடைய பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து வருவதாகவும், தனக்கு மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல்கள் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

திரைப்பட தயாரிப்பாளர் கைது

இந்த புகாரின் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளரான பவ்நிந்தர்சிங் தத் உள்ளிட்ட 12 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல், அச்சுறுத்துதல், பெண்களுக்கு எதிரான குற்றம், இணையதள குற்றம் உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவ்நிந்தர்சிங் தத்தை கைது செய்தனர். பின்னர் அவரை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான அவர் கடந்த 4 வருடங்களாக பெரியமுதலியார்சாவடி பகுதியில் திரைப்பட நிறுவனம் நடத்தி வந்ததோடு ஹெர்பல் பவுடர் விற்பனையும் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்