அதிக சத்து மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உதகையில் அதிக சத்து மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.;

Update:2023-03-10 13:54 IST

சென்னை,

நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6.3.2023 அன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்றும், இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதில் ஜெய்பா பாத்திமா, த.பெ.முகமது சலீம் என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும். நாசஜியா, த.பெஜயாவுல்லா, ஆயிஷா, த/பெ.சர்புதீன், மற்றும் குல்தூண் நிஷா தபெ முகமது உசேன். ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்