தேன்கனிக்கோட்டை
தளி, ஊத்தங்கரை பகுதிகளில் நீர் நிலைகளில் தவறி விழுந்து முதியவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
முதியவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 60). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று காலை வேலைக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார். ஆனால் மாலை அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது தளி அருகே உள்ள கீஜனகுப்பம் கிருஷ்ணராஜ் ஏரியில் முதியவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது முதியவர் ஏரியில் குளித்த போது தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி
ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (35). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் மதுபோதையில் கடந்த 21-ந் தேதி கீழ்குப்பம் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் அவர் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.