பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
எலக்ட்ரீசியன்
கர்நாடக மாநிலம் பெங்களூரு தாவரேகெடீர பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 33), எலக்ட்ரீசியன். இவர், தனது நண்பர் சீனிவாசன் என்பவருடன் கடந்த 22-ந் தேதி மோட்டுப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரது வீட்டுக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்தார். கோவில் திருவிழா முடிந்த பின்னர் சதீஷ்குமார், சீனிவாசன் ஆகியோர் ஒகேனக்கல்லுக்கு சென்றனர். ஒகேனக்கல்லில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டமலை காவிரி ஆற்றில் சதீஷ்குமார் குளித்து கொண்டு இருந்தார். அப்போது ஆற்றில் ஆழமான பகுதிக்கு நீந்தி சென்றபோது அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சதீஷ்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில்வேகமாக அடித்து செல்லப்பட்டார்.
ஆற்றில் உடல் மிதந்தது
இதுகுறித்து ஒகேனக்கல் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து சதீஷ்குமாரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் சதீஷ்குமார் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஒகேனக்கல்லுக்கு விரைந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமாரின் உடல் காவிரி ஆற்றில் மிதந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.