ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

ஜேடர்பாளையம் ராஜா வாய்க்காலில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-06-19 19:00 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையத்தில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலியானார்.

கூரியர் ஊழியர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கைலாசம்பாளையம் பக்தவச்சலம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 28). திருமணமாகவில்லை. இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன், அவருடன் பணிபுரியும் நண்பர்களான திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சரவணன் (26), மணிகண்டன் (26), ஜீவானந்தம் (22), சவுந்தரராஜன் (24), கிருபாகரன் (25), ஞானசுந்தரம் (26), கவுசிகன் (26), ஆனந்த் (26) என 9 பேர் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் உள்ள படுகை அணைக்கு வந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பூங்காவை சுற்றி பார்த்து விட்டு ராஜா வாய்க்காலில் அனைவரும் குளிப்பதற்காக சென்றனர்.

உடல் மீட்பு

இதனை தொடர்ந்து ராஜா வாய்க்காலில் குளித்து கொண்டு இருந்தபோது கார்த்திகேயன் வாய்க்காலின் மறுகரைக்கு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததால் கரைக்கு செல்ல முடியாமல் தத்தளித்து தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் கார்த்திகேயனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ராஜவாய்க்காலில் இறந்த நிலையில் கார்த்திகேயனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்