தம்மம்பட்டி அருகே பரிதாபம்மங்களஅருவியில் மூழ்கி 2 பேர் சாவுஇன்னொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Update: 2023-06-15 19:42 GMT

தம்மம்பட்டி

தம்மம்பட்டி அருகே பச்சமலை மங்கள அருவியில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இன்னொருவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பச்சமலை மங்கள அருவி

சேலம் தம்மம்பட்டியை அடுத்த பச்சைமலை பெரியமங்கலம் கிராமத்தில் மங்கள அருவியில் 3 வாலிபர்கள் விழுந்து விட்டதாக 108 ஆம்புலன்சு தகவல் வந்தது. ஆம்புலன்சு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. உடனே தம்மம்பட்டி போலீசாரும், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்களும் பச்சமலைக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த 2 பேரது உடல்களை மீட்டனர். மேலும் இன்னொரு பகுதியில் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு வாலிபரையும் மீட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர்கள் ஊட்டி பகுதியை சேர்ந்த தாஜுதீன் மகன் தமிம் (வயது 23), ஜெரின் மகன் ஜஸ்டின் (23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் தமிம், ஆம்புலன்சுகளை வைத்து சேவை செய்து வந்துள்ளார். தண்ணீரில் தத்தளித்தவர் அதே பகுதியை சேர்ந்த நிஷாந்த் (24) என்பது தெரிய வந்தது. நிஷாந்த்க்கு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் துறையூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்ததும், அங்கிருந்து பச்சமலைக்கு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்களுடன் ஒரு பெண் வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்