ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலிதண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

Update: 2023-04-30 19:00 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார். மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

10-ம் வகுப்பு மாணவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அவளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் தர்ஷன் (வயது 15). 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று பஸ்சில் ஒகேனக்கல் வந்தார். இதையடுத்து ஒகேனக்கல்லில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டுமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்தனர். அப்போது தர்ஷன் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கினார்.

இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக தர்ஷனை மீட்டனர். ஆனால் அதிகளவில் தண்ணீர் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷனை ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

இதேபோல் பெங்களூரு நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சேவியர் (18). பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்று ஒகேனக்கல் வந்துள்ளார். பின்னர் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது சேவியர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சேவியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்