வடமாநில வாலிபர் மர்ம சாவு

சேலம் செவ்வாய்பேட்டை அருகே வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-16 20:01 GMT

அன்னதானப்பட்டி

சேலம் செவ்வாய்பேட்டை அருகே வடமாநில வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முள் புதரில் பிணம்

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜூலிமியா என்பவரின் மகன் தவ்ராஜ் அன்சாரி (வயது 40). இவர் செவ்வாய்பேட்டை, நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் உள்ள தனியார் பருப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தவ்ராஜ் அன்சாரி வேலை முடிந்து மீண்டும் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடன் பணிபுரிவோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நரசிம்மன் செட்டி ரோட்டில், ரெயில்வேக்கு சொந்தமான காலி இடத்தில் உள்ள முள் புதரில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று காலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அதில் இறந்து கிடந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தவ்ராஜ் அன்சாரி என்பது தெரியவந்தது. அவர் தலைகுப்புற விழுந்து கிடந்தார். தலை, முகம், உடல் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தன.

கொலையா? போலீசார் விசாரணை

மேலும் அவரது உடல் அருகே காலி மதுபாட்டில்கள் இருந்தன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சம்பவத்தன்று தவ்ராஜ் அன்சாரி வேலை முடிந்து அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தவ்ராஜ் அன்சாரி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது போதையில் தவறிவிழுந்து இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்