மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
வாழப்பாடி அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
வாழப்பாடி
வாழப்பாடி அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
கல்லூரி மாணவர்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் வசந்த பிரசாத் (வயது 22). இவரும், வைத்தியகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த பூமலை என்பவரின் மகன் யுவராஜ் (22) என்பவரும் உடையாப்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை, வாழப்பாடியில் இருந்து வைத்தியகவுண்டன்புதூரில் உள்ள யுவராஜின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை யுவராஜ் ஓட்டினார். வசந்த பிரசாத் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
அரசு பஸ் மோதியது
வாழப்பாடி அருகே கொட்டவாடி பிரிவு சாலை அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியை மோட்டார் சைக்கிளில் அவர்கள் முந்தி செல்ல முயன்றனர். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேராக மோதியது.
இந்த விபத்தில் உடல் நசுங்கி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்தி்ற்கு விரைந்து சென்று மாணவர்கள் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.