விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
ஓசூர் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்
ஓசூர் அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார். இவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தனியார் நிறுவன ஊழியர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள சொரக்காயல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 24). திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் முருகேசன் (24), திருப்பத்தூர் மாவட்டம் திருமணஞ்சோலையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (27). இவர்கள் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வந்தனர்.
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டினார். தினேஷ்குமாரும், பாலகிருஷ்ணனுடன் பின்புறம் அமர்ந்திருந்தனர். அங்குள்ள ஜல்லி கிரஷர் அருகே சென்ற போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது.
வாலிபர் சாவு
இந்த விபத்தில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகேசன், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகேசன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கும், பாலகிருஷ்ணன், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று இறந்த தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.