விபத்தில் பெண் பலி
சிங்காரப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
ஊத்தங்கரை
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் மேல்மருவத்தூருக்கு கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் கர்நாடக அரசு பஸ்சில் ஊருக்கு புறபட்டனர். சிங்காரப்பேட்டை அருகே சாசானூர் பகுதியில் டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினர். அதில் இருந்து இறங்கிய பயணிகள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் பெங்களூருவை சேர்ந்த சாவித்ரி அம்மாள் (வயது 52) என்பவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சாவித்ரி அம்மாள் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.