கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு
பாரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தாள்.
பள்ளி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா தாமோதரஅள்ளி அருகே சாதிநாயக்கன்பட்டி பக்கமுள்ள கர்த்தன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் பிரித்திகா (வயது 13). சிறுமி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இதனிடையே நேற்று முன்தினம் மாணவி பிரித்திகா வீட்டின் அருகில் நடந்து வந்து கொண்டு இருந்தாள். அப்போது கால் தவறி அங்குள்ள கிணற்றில் மாணவி தவறி விழுந்தாள். மாலை வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள கிணற்றில் மாணவி பிணமாக மிதப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவி பிரித்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.