கடற்படை கப்பலில் பணியில் இருந்த வீரர் மின்சாரம் தாக்கி பலி

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் இந்திய கடற்படை கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியின்போது மின்சாரம் தாக்கி வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-09-16 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் இந்திய கடற்படை கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியின்போது மின்சாரம் தாக்கி வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடற்படை கப்பல்

இந்திய கடற்படையின் சென்னை முகாமுக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கார் நிகோபார் என்ற ரோந்து கப்பல் ராமேசுவரம் கடல் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.

இந்த கப்பலில் கடற்படை கமாண்டர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் இருந்தனர்.

இந்த கப்பலில் ஜி.பி.எஸ். கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதை சரி செய்ய கடற்படை கப்பலின் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணிபுரிந்து வந்த கடற்படை வீரர் சுபம்குமார் (வயது 23) முயற்சி செய்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் சுபம்குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவர் டெல்லி மாநிலத்தில் கான்ட் நரேன் என்ற கிராம பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரது உடலை கடற்படை குழுவினர் ராமேசுவரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இது குறித்து கடற்படை அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, சுபம் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடற்படை கப்பலில் பணியில் இருந்த வீரர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கடற்படையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்