வெவ்வேறு விபத்துக்களில் 4 பேர் சாவு

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2023-10-15 20:12 GMT

சேலம்

சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்து களில் 4 பேர் பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

சேலம் அம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 55). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகள் உள்ளனர். தீர்த்தகிரி கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவர், முத்தம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு சேலத்துக்கு வந்துள்ளார். சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருவழிப்பாதையில் சென்றதாக தெரிகிறது. அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற கார், தீர்த்தகிரி மொபட்டில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று தீர்த்தகிரி உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

டெம்போ வேன்

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ராஜகோபால் செட்டியார் தெருவை சேர்ந்த முருகன் மகன் சபரிவேலன் (26). இவர், சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.. நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தாரமங்கலம் அருகே ஆயாமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது டெம்போ வேன் மோதியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சபரிவேலை மீட்டு அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சபரிவேலன் பரிதாபமாக இறந்தார். தாரமங்கலம் போலீசுார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் சாவு

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி ரங்காபுரம் பகுதியை சேர்ந்த ராவணன் மகன் சுந்தரேஸ்வரன் (25). சுந்தரேசுவரன் தன்னுடைய தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலுக்கு சென்றார். பூலாவரி பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேசுவரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய தந்தை காயம் அடைந்தார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொங்கணாபுரம்

கொங்கணாபுரம் அருகே உள்ள குண்டுராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைகவுண்டர் (75). இவர் பாப்பம்பாடி அருகிலுள்ள கொண்டக்காரனூர் பகுதிக்கு வந்தார். சம்பவத்தன்று சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்