பர்கூர்
பர்கூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
விவசாயி
பர்கூர் அருகே உள்ள சின்ன காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 60). விவசாயி. இவர் நேற்று அதிகாலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது தென்னை மட்டை மின்கம்பி மீது விழுந்து கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத சின்னராஜ் மின் கம்பி மீது காலை வைத்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் சின்னராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மின் இணைப்புதுண்டிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் விரைந்து சென்று விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.