ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் மூழ்கி தொழிலாளி பலி

Update: 2023-07-08 19:30 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையில் மூழ்கி சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி பலியானார்.

கூலித்தொழிலாளி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோவில் பனங்காடு ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் மாரியப்பன் (வயது 27). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு தங்கி கூலி வேலை செய்வதற்காக மாரியப்பன் தனது நண்பர்களுடன் வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாரியப்பன் தன்னுடன் வேலை செய்யும் 3 பேருடன் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு துணிகளை துவைத்துவிட்டு குளித்து வர சென்றார். இதையடுத்து அவர்கள் துணிகளை துவைத்து விட்டு தண்ணீரில் இறங்கி ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாரியப்பன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

உடல் மீட்பு

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் சென்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊத்தங்கரை தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தேடி தண்ணீரில் மூழ்கிய மாரியப்பனை பிணமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்