சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சரக்கு வேன் மோதி சாவு

சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போதுபுதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சரக்கு வேன் மோதி சாவுமேச்சேரி அருகே பரிதாபம்

Update: 2023-07-05 19:55 GMT

மேச்சேரி

மேச்சேரி அருகே சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது சரக்கு வேன் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கிரஷர் ஊழியர்கள்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே செலவடை வெண்ணண்ணம்பட்டியை சேர்ந்தவர் வல்லரசு என்ற பிரபு (வயது 23). கிரஷர் நிறுவன ஊழியர். இவரும், அவருடன் பணிபுரியும் டிப்ளமோ என்ஜினீயர் கார்த்திக் (25) என்பவரும், கிருஷ்ணகிரியில் இருந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான தாரமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தனர். வல்லரசு மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கார்த்திக் பின்னால் அமர்ந்து இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தொப்பூர்- மேச்சேரி சாலையில் சின்னகம்மம்பட்டி அருகே வந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வல்லரசு, கார்த்திக் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பலி

பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பலியாகி கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வல்லரசு உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பலியான வல்லரசுக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிறது. பிரியங்கா என்ற மனைவி உள்ளார். அவரும் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். விபத்தில் பலியான கார்த்திக்கிற்கு திருமணம் ஆகவில்லை. மோட்டார் சைக்கிள் மீது மோதியது, அந்தியூரில் இருந்து பெங்களூருவுக்கு வாழைக்காய் லோடு ஏற்றிச்சென்ற சரக்கு வேன் என்பது தெரிய வந்தது. சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்