காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-07-01 13:52 GMT

கோவை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாதோர் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

அரசு அல்லது தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்,

மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அந்த அமைப்பினர் வந்து பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்திய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், சிலர் விசில் ஊதிய படியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உங்கள் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும்.

இது தொடர்பாக மாலையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் உறுதி கூறினார்கள். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் காது கேளாதோர் கூட்டமைப்பில் பலர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்த வேண்டும்.

நிறைவேற்ற வேண்டும்

தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் காதுகேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த முடியும். இதுபோன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்