ஊஞ்சலூர் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி பலி- கோவிலுக்கு வந்தபோது பரிதாபம்

ஊஞ்சலூர் அருகே ஆற்றில் மூழ்கி விவசாயி பலி- கோவிலுக்கு வந்தபோது பரிதாபம்;

Update: 2022-08-21 21:34 GMT

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே கோவிலுக்கு வந்தபோது ஆற்றில் மூழ்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கோவிலுக்கு...

கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). இவர் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே மன்னாதம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவதற்காக பஸ், கார் மூலம் உறவினர்கள், நண்பர்களுடன் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் நேற்றுக்காலை வந்தனர். இவர்களுடன் கோவை மதுக்கரை அன்பு நகரை சேர்ந்த விவசாயியான பாலசண்முகம் (44) என்பவரும் வந்தார்.

ஆற்றில் மூழ்கி சாவு

இதில் கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றில் பாலசண்முகம் குளித்து உள்ளார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைக்கண்டதும் அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றதுடன், சத்தம் போட்டு கத்தினர். மேலும் இதுகுறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய பால சண்முகத்தை தேடினர். 2 மணி நேர தேடலுக்கு பின்னர் பால சண்முகத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மீட்கப்பட்ட பாலசண்முகம் கணபதிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பாலசண்முகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீசார் விரைந்து சென்று பாலசண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்