துறையூர் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

துறையூர் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-27 20:35 GMT

துறையூர் பெரிய ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரிய ஏரி

துறையூர் தலைமை தபால் நிலையம் அருகே உள்ளது பெரிய ஏரி. சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு பச்சைமலை பகுதியில் இருந்து தண்ணீர் வரும். துறையூர் பெரிய ஏரி மூலம் சுற்றுவட்டார விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது.

மேலும் துறையூர் பகுதி மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக பெரிய ஏரி உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய ஏரியில் ஒரு புறம் மனித கழிவுகள், மறுபுறம் நகரிலுள்ள கோழி இறைச்சி கடைகளின் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுவதால் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.

அப்புறப்படுத்த கோரிக்கை

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய ஏரியில் மீன்கள் செத்து மிதந்து வருகிறது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. ஆனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த துறையூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி பெரியஏரியை சுற்றி கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறையூரை சேர்ந்த சமூகஆர்வலர்கள் கோரிகை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்