குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திண்டுக்கல் அருகே குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.;
திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து ஊராட்சியில் ராமன் குளம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருந்தன. இந்த நிலையில் குளத்தில் அந்த மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. மேலும் அங்கு துர்நாற்றமும் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். குளத்தில் துர்நாற்றம் வீசியதால் தண்ணீரில் யாரேனும் விஷம் கலந்து இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்திலோ அல்லது குளத்தில் இருந்து வடிகால் வழியாக வெளியேறி கொண்டிருக்கும் தண்ணீரை ஆடு, மாடுகள் குடிக்காமல் இருக்க பொதுமக்கள் கண்காணிக்கும்படி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.