குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
திண்டுக்கல்லில், குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன.
திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் பர்மா காலனி அருகே மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. மேலும் குளத்தை சுற்றிலும் மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குளத்துக்கு மழைநீர் வரும் வகையில் கால்வாய் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கனமழையின் போது கழிவுநீரும் குளத்துக்கு வந்து விடுகிறது. எனவே குளம் எப்போதும் தண்ணீரால் ததும்புவதை பார்க்கலாம். அந்த குளத்தில் கெண்டை, கட்லா உள்ளிட்ட மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் கடந்த 3 நாட்களாக குளத்தில் உள்ள மீன்கள் ஒவ்வொன்றாக செத்து மிதக்கின்றன. இவ்வாறு இறந்த ஏராளமான மீன்கள், குளத்தின் கரையை ஓட்டி ஒதுங்கி மிதக்கின்றன.
மீன்கள் அழுகி விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குளத்தின் அருகே உள்ள பர்மா காலனி, ரெத்தினம்நகர் குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மக்கள் நடைபயிற்சி செய்ய முடியவில்லை. எனவே குளத்தில் மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தினமும் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் குளத்தில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது தண்ணீர் நச்சுதன்மையாக மாறிவிட்டதா? என்று தெரியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.