ஓட்டேரி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

வேலூர் ஓட்டேரியில் உள்ள ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.;

Update:2023-03-05 23:26 IST

ஓட்டேரி ஏரி

வேலூரை அடுத்த ஓட்டேரி பகுதியில் 106 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி ஒருகாலத்தில் வேலூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்தது. தற்போது ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாராததால் ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் சரியாக வருவதில்லை.

நீர்கால்வாய் ஆக்கிரமிப்பு, தூர்வாராது உள்ளிட்டவற்றால் கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையில் ஓட்டேரி ஏரி முழுமையாக நிரம்பவில்லை. ஆழமான பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கியிருந்தது. அதுவும் தற்போது வறண்டு விட்டது.

ஏரியின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக உறைகிணறு, நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது உறைகிணறு பயன்பாட்டில் இல்லை. இங்கு தேங்கியிருந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் காணப்பட்டன. அவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிடித்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள தண்ணீரில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விஷம் கலப்பா?...

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று தண்ணீரை பார்வையிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் இதுதொடர்பாக விசாரித்தனர். தண்ணீரில் மர்மநபர்கள் விஷம் கலந்ததால் மீன்கள் செத்து மிதக்கிறதா அல்லது கோடைக்காலத்தையொட்டி வேலூரில் தாக்கம் அதிகரித்து உள்ளது. அதனால் மீன்கள் செத்து போனதா என்று மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஏரியில் தண்ணீர் தேங்காத இடத்தில் ஏராளமான ஆடு, மாடுகள் மேய்கின்றன. அவை மீன்கள் செத்து மிதக்கும் தண்ணீரை குடிக்காமல் இருப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்