ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-25 21:24 GMT

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கனிராவுத்தர் குளம்

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு, சத்தி ரோட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் கனிராவுத்தர் குளம் உள்ளது. பல்வேறு அமைப்புகளின் நிதி உதவியுடன் இந்த குளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. தற்போது குளம் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர்.

குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளதால், இந்த பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி சென்றனர். அப்போது, குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இந்த செய்தி அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமானோர் அங்கு வந்து பார்த்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இந்த குளத்தில் சிலர் மீன்களை பிடித்து சென்றனர். இன்று (அதாவது நேற்று) காலையில் அதே இடத்தில் தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை' என்றனர்.

திடீரென குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து மீன்கள் செத்ததற்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கனிராவுத்தர் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்