மேட்டூர் அணையின் உபரி நீர் பாதையில் செத்து மிதந்த மீன்கள்

மேட்டூர் அணையின் உபரி நீர் பாதையில் மீன்கள் செத்து மிதந்தன.

Update: 2022-11-15 21:54 GMT

மேட்டூர்:

உபரி நீர்

மேட்டூர் அணை நிரம்பும் நேரங்களில் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் ஜூலை மாதத்தில் இருந்து 3 முறை 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே செல்லும் உபரி நீர் பாதை வழியாக சென்று சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மீண்டும் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

தற்போது அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக உள்ளதால் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே செல்லும் உபரி நீர் பாதையில் ஏராளமான இடங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

மீன்கள் செத்து மிதந்தன

இந்த இடங்களில் நேற்று சிறிய வகை மீன்களும், ஒரு கிலோ எடையுள்ள பெரிய வகை மீன்களும் தண்ணீரில் செத்து மிதந்தன. ஒரு சில இடங்களில் சிறிய வகை மீன் குஞ்சுகள் மயங்கி நிலையிலும் கிடந்தன. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்களும், மீனவர்களும் வலைகளை வீசி மீன்களை குவியல் குவியலாக அள்ளிச் சென்றனர். சிறிய வகை மீன் குஞ்சுகளை ஒரு சிலர் அள்ளிச் சென்று கருவாடாக மாற்றுவதற்கு காய வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

மீன்கள் திடீரென்று இறந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் ஒரு அமிலம் போன்று துர்நாற்றம் வீசியதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினார்கள். மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக இறந்ததா? அல்லது கழிவுநீர் கலந்த தண்ணீர் மாசு அடைந்ததால் மீன்கள் செத்ததா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்