சேலத்தில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் காவலாளி பிணம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்..
காவலாளி
சேலம் கிச்சிப்பாளையம் முருக கவுண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் கவுசிக் (வயது 49). இவர் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி ரத்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் தனது மகனுடன் ரத்னா இருக்கிறார்.
நேற்று முன்தினம் பூட்டப்பட்டு கிடந்த கவுசிக் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அழுகிய நிலையில் மீட்பு
அப்போது கவுசிக் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கிச்சிப்பளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கவுசிக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோத்னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவுசிக் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் அவரது இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.