கோபி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி; தந்தை கண் முன்னே பரிதாபம்
கோபி அருகே குளத்தில் மூழ்கி தந்தை கண் முன்னே சிறுமி பலியானார்.
கடத்தூர்
கோபி அருகே குளத்தில் மூழ்கி தந்தை கண் முன்னே சிறுமி பலியானார்.
மீன் பிடிக்க...
நம்பியூா் அருகே உள்ள பழைய சூரிபாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு யாழினி (வயது 9) என்ற மகளும், வசந்த் (7) என்ற மகனும் உள்ளனர். இதில் யாழினி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். வசந்த் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று விடுமுறை என்பதால் யாழினி, வசந்த் ஆகியோருடன் கதிர்வேல் கோபிைய அடுத்த எலத்தூர் செங்காளிபாளையம் பெரிய குளத்துக்கு சென்றார். பின்னர் அவர் குளத்தின் ஒரு இடத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தார். மற்றொரு இடத்தில் குழந்தைகள் 2 பேரும் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சாவு
அப்போது திடீரென யாழினி தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டதும் வசந்த் தனது தந்தை கதிர்வேலிடம் கூறினான். உடனே கதிர்வேல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினார். அப்போது குளத்தில் உள்ள சேற்றில் மூழ்கி யாழினி இறந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவருடைய உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். யாழினியின் உடலை பார்த்து கதிர்வேல் கதறி அழுதார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யாழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.