ஈரோட்டில் பரிதாபம்: ஊஞ்சல் ஆடும்போது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலி
ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடும்போது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியானான்.
ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடும்போது சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியானான்.
சிறுவன்
ஈரோடு வெங்கிடுசாமி வீதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ். இவருடைய மனைவி சகிலாபானு. இவர்களுக்கு சைது பாத்திமா என்று மகளும், சாகுல் ஹமீது (வயது 12) என்ற மகனும் உள்ளனர்.
நேற்று காலை அமீர் அப்பாஸ் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக சகிலாபானுவுடன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் சாகுல் ஹமீது மட்டும் தனியாக இருந்தான். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு அமீர் அப்பாஸ், சகிலாபானு ஆகியோர் வீட்டுக்கு திரும்பினார்கள்.
கழுத்து இறுக்கியது
வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்கப்படவில்லை. இதனால் அமீர் அப்பாஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடும் சேலையில் சாகுல் ஹமீதின் கழுத்து மாட்டிக்கொண்டு இறுக்கப்பட்ட நிலையில் தொங்கி கொண்டிருந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மகனை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அப்போது உடல்நலம் மோசமானதால் சாகுல் ஹமீதை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சாகுல் ஹமீது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் வீட்டில் தனியாக விளையாடியபோது ஊஞ்சலில் கட்டிய சேலையில் கழுத்து இறுகி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.