நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்ததில் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
ஆட்டோ கவிழ்ந்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் இருந்து தண்டுக்காரன்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் மாலை 3 பயணிகளை ஏற்றி கொண்டு ஆட்டோ ஒன்று புறப்பட்டது. இந்த ஆட்டோவை தண்டுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வம் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கெங்கலாபுரம்-ஏலகிரி சாலையில் மேட்டுக்கொட்டாய் என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது, ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய ஆட்டோ சாலையோரத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் செல்வம் மற்றும் அதில் இருந்த தண்டுக்காரன்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் மாதையன் என்கிற மாதேஷ் (61), குணசேகரன் (60), முருகன் (40) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
வனத்துறை ஊழியர் பலி
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இரவில் சிகிச்சை பலனின்றி ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் மாதையன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று, மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.