நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அரசு பஸ்சில் ஏறியபோது தவறி விழுந்த தொழிலாளி, சக்கரத்தில் சிக்கி பலியானார்.
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நார்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவமூர்த்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்ன மயில் (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்தநிலையில் தேவமூர்த்தி நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக தர்மபுரி செல்ல நினைத்தார். இதனால் அவர் நார்த்தம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது லளிகத்தில் அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சை தேவமூர்த்தி நிறுத்தி முன் படிக்கட்டு வழியாக ஏறினார். பின்னர் டிரைவர் பஸ்சை செலுத்தியபோது, தேவமூர்த்தி தவறி கீழே விழுந்தார்.
பலி
இதனால் பஸ்சின் பின் சக்கரம் அவர் மீது ஏறி, இறங்கியது. இதில் தேவமூர்த்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதனை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான தேவமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ்சில் ஏறிய தொழிலாளி, தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.