காவேரிப்பட்டணம் அருகே யானை மிதித்து விவசாயி பலி

Update: 2022-11-01 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே யானை மிதித்ததில் விவசாயி பலியானார்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பனகமுட்லுவை சேர்ந்தவர் பன்னியப்பன் (வயது 61). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி தீபாவளி அன்று காலை தனது விவசாய நிலத்திற்கு பன்னியப்பன் சென்றார். அங்கு மாட்டு சாணம் அள்ளி கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று பன்னியப்பனை தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் யானை அவரை கீழே தள்ளி காலால் மிதித்தது. பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது.

பரிதாப சாவு

யானை காலால் மிதித்ததில் பன்னியப்பன் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னியப்பன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்த விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்