அந்தியூர் அருகே பரிதாபம்: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் சாவு- பெற்றோர் கதறல்
அந்தியூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் அவர்களது பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவருடைய மகன் நந்த கிஷோர் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த பாலுசாமி மகன் சிபினேஷ் (10), வெங்கடேஷ் மகன் ராகவன் (10). சிபினேசும், ராகவனும் அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
3 பேர் சாவு
நந்த கிஷோர், ராகவன், சிபினேஷ் ஆகிய 3 பேரும் ஒரே வீதியை சேர்ந்தவர்கள். 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் 3 பேரும் நாட்ராய நகரில் உள்ள தாமரை குட்டை என்ற இடத்துக்கு நேற்று சைக்கிளில் சென்றுள்ளனர். அங்குள்ள கல்குவாரி குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. அதைப்பார்த்ததும் 3 பேருக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனால் சிறிதுநேரத்தில் நீரில் மூழ்கி இறந்தனர்.
அதிர்ச்சி
இந்த நிலையில் நேற்று வீட்டைவிட்டு சென்ற தங்களது மகன்கள் வீடு திரும்பவில்லையே என பெற்றோர்கள் பதறினர். இதையடுத்து அவர்களை தேடிச்சென்றனர். அப்போது தாமரைக்குட்டை பகுதியில் மாணவர்களின் சைக்கிள் மட்டும் நின்றுகொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி இருக்கலாம் என நினைத்த அவர்கள் உடனே இதுபற்றி அந்தியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பெற்றோர்கள் கதறல்
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்குவாரி குட்டையில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் உடல்களை மீட்டனர். அவர்களுடைய உடல்களை பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இறந்த 3 மாணவர்களின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவர்கள் 3 பேர் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.