குடும்பத்தினர் கண் எதிரே விபத்து: கார் மோதி தொழிலாளி பலி-மகனுக்கு தீவிர சிகிச்சை

நாமக்கல் அருகே குடும்பத்தினர் கண் எதிரே கார் மோதியதில் தொழிலாளி பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவருடைய மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-09-01 18:09 GMT

பரமத்திவேலூர்:

குடும்பத்தினர் கண் எதிரே விபத்து

நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி சத்யா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). இவருடைய மனைவி சுசீலா (24). இந்த தம்பதிக்கு துர்காதேவி (7), உஷா (2) என்ற மகள்களும், நித்திஷ் (3) என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் நாமக்கல் அருகே புலவர்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள ஒரு லாரி பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் மணிகண்டன் நேற்று தனது குடுபத்துடன் அங்குள்ள சந்தைக்கு நடந்து சென்றார். அவர்கள் நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது பரமத்தியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மணிகண்டன், அவருடைய மகன் நித்திஷ் ஆகியோர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.

தொழிலாளி பலி

இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். கணவர், மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து சுசீலா அலறினார். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த மணிகண்டன், நித்திசை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுவன் நித்திஷ் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

விபத்தில் பலியான மணிகண்டன் உடலை பார்த்து அவருடைய மனைவி, மகள்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும், கரைய வைப்பதாக இருந்தது.

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

குடும்பத்தினர் கண் எதிரே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்