உறவினர் வீட்டில் வயரிங் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலி

குமாரபாளையம் அருகே உறவினர் வீட்டில் வயரிங் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

Update: 2022-06-08 18:31 GMT

குமாரபாளையம்:

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அருகே உள்ள தட்டாங்குட்டை பஞ்சாயத்து உப்புகுளத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 22). இவர் குமாரபாளையம் வளையக்காரனூர் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இவருடைய உறவினரான செல்லம்மாள் என்பவர் உப்புகுளத்தில் புது வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டின் கிரக பிரவேஷம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பிரகாஷ் அந்த வீட்டில் நேற்று வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அறை ஒன்றில் வயர் இணைப்புகளை சரிபார்த்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் வேலை பார்த்ததால், பிரகாஷ் மின்சாரம் தாக்கி பலியானது தெரியவந்தது.

சோகம்

இதையடுத்து போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே உறவினர் வீட்டில் வயரிங் வேலை செய்தபோது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்