மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு; சாவிலும் இணை பிரியாத தம்பதி

பவானி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.

Update: 2022-06-03 20:49 GMT

பவானி

பவானி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.

மாற்றுத்திறனாளி

பவானியை அடுத்த ஒரிச்சேரிபுதூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). மாற்றுத்திறனாளியான இவர் விவசாய பம்பு செட் மோட்டாருக்கு காயில் கட்டும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் (68). இவர்களுக்கு சத்யபிரியன் என்ற மகனும், சத்யகலா என்ற மகளும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அய்யம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அய்யம்மாளுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை அங்கிருந்தவர்கள் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அய்யம்மாள் இறந்தார்.

சாவு

இதைத்தொடர்ந்து அய்யம்மாளின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஒரிச்சேரிபுதூரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே மனைவி இறந்த தகவல் கேட்டதும் நாராயணன் பதறியடித்து தனது 3 சக்கர சைக்கிளில் ஆம்புலன்சை நோக்கி வந்தார். அப்போது ஆம்புலன்சில் இருந்து இறக்கப்பட்ட மனைவியின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்காமல் அவர் தன்னுடைய 3 சக்கர சைக்கிளில் இருந்து மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் நாராயணனை மீட்டு சிகிச்சைக்காக ஆப்பக்கூடலில் உள்ள அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்ததை கண்டதும் கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

மேலும் செய்திகள்