இரவு, பகலாக சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப்பணிகள் இரவு, பகலிலும் தீவிரமாக நடந்து வருகிறது.;
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம், ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப்பணிகள் இரவு, பகலிலும் தீவிரமாக நடந்து வருகிறது.
சம்பா, தாளடி சாகுபடி
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல்சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவுஅதிகரிக்கும்.ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவு நடைபெற்றது. மேலும் நெல்லை தவிர கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் உள்ளிட்ட பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சைமாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சையை அடுத்த ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, சித்தாயல், ராயந்தூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், ரெட்டிப்பாளையம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இதில் ஒரு சில விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யாமல் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்கொண்டு முன்னதாகவே அறுவடையை முடித்து நெல்லை விற்பனை செய்து விட்டனர்.
மழையால் பாதிப்பு
இப்பகுதிகளில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆற்று தண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் விதைப்பு, நாற்று நடுதல், எந்திரம் வாயிலாக நடவுப்பணி என்று விவசாயிகள் சாகுபடி மேற்கொண்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த மழை, கடும் பனியால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டன. அவ்வாறு பாதித்த பகுதிகளில் மறு நாற்று நட்டு விவசாயிகள் சாகுபடியை மேற்கொண்டனர்.இப்பகுதிகளில் பொங்கல் மற்றும் அடுத்த சில நாட்களில் அறுவடையை விவசாயிகள் முடித்து விடுவர். இம்முறை இயற்கை இடர்பாடு, காலதாமதம் போன்றவற்றால் தற்போதுதான் அறுவடை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போதைய சூழலில் இன்னும் சில நாட்களில் இப்பகுதிகளில் முழுமையாக அறுவடைப்பணிகள் முடிந்து விடும் நிலை உள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து எந்திரங்கள்
இதற்காக திருவண்ணாமலை, விருத்தாச்சலம், பெரம்பலூர், சேலம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து இருந்து அறுவடை எந்திரங்கள் வந்துள்ளன. இருப்பினும் அறுவடை செய்ய வேண்டிய ஏக்கர் அதிகளவில் உள்ளதால் ராமநாதபுரம், 8.கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை உட்பட பல பகுதிகளில் இரவு 12 மணி வரையிலும் அறுவடைப்பணிகள் நடக்கிறது.இரவு நேரத்தில் இப்பகுதியில் போக்குவரத்து அதிகம் இருக்காது என்பதால் அறுவடை செய்த நெல்லை டிராக்டரில் ஏற்றி கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எளிதில் கொண்டு சென்று விடுகின்றனர். மேலும் தற்போது வெயில் அதிகளவில் அடிப்பதால் உடனுக்குடன் நெல்லை காயவைத்து தூற்றி விற்பனை செய்ய ஏதுவாக உள்ளது என்பதால் இரவு, பகல் என்று எப்பொழுதும் இப்பகுதியில் அறுவடை பணிகள் வெகு வேகமாக நடந்து வருகிறது. அதேபோல் அறுவடை முடிந்த வயல்களில் டிராக்டர்களில் வைக்கோல் கட்டும் எந்திரத்தை இணைத்து வைக்கோல் கட்டியும் விற்பனை நடைபெற்று வருகிறது.