ஒரே நாளில் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் நேற்று ஒரே நாளில் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-09-22 18:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் நேற்று ஒரே நாளில் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் சாமி தரிசனம் செய்தனர்.

ஓ.பன்னீர்செல்வம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். காசியில் உள்ள கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து, கங்கை தீர்த்தத்தால் சாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

அவருடன் அவரது தம்பி ராஜா, மகன் ஜெயப்பிரதீப் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். இதை தொடர்ந்து மற்ற சன்னதிகளுக்கு சென்றும் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம் செய்தார். அவருடன் தர்மர் எம்.பி, அ.தி.மு.க. நகர் பொருளாளர் தர்மர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் வந்திருந்தனர்.

ஏற்கனவே கடந்த 18-ந்தேதி அன்று ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடி சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் அங்கிருந்து காசிக்கு சென்று, தரிசனம் முடித்து அங்கிருந்து கங்கை தீர்த்தத்தை கொண்டு வந்து நேற்று ராமேசுவரத்தில் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆர்.பி.உதயகுமார்

முன்னதாக நேற்று காலை ராமேசுவரம் கோவிலில் தரிசனம் செய்வதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் வந்தார். அக்னி தீர்த்தக்கடலில் தர்ப்பண பூஜை செய்து புனித நீராடினார். அதன்பின்னர் அவர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார்.

இதை தொடர்ந்து திட்டக்குடி அருகே உள்ள மண்டகப்படியில் புரோகிதர்கள் மூலம் திலஹோமம் மற்றும் நவக்கிரக பூஜைகளை செய்தார். தில ஹோமம் என்பது அனைத்து விதமான தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும் பரிகார ஹோமம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்