சீர்காழி சட்டைநாதர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தமிழக கவர்னர் சாமி தரிசனம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Update: 2023-05-23 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தமிழக கவர்னர் சாமி தரிசனம் செய்தார். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கவர்னர் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் உடன் பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு நேற்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டைநாதர் கோவிலுக்கு நேரில் வருகை தந்தார். அப்போது கீழ கோபுரம் வாசல் வழியாக வந்த தமிழக கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் தருமபுரம் ஆதீனம் சார்பாக பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் தமிழக கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கவர்னர் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி அம்பாள், சட்டைநாதர், அஷ்ட பைரவர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து யாகசாலை பூஜையை நேரில் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.

ஐம்பொன் சிலைகளை பார்வையிட்டார்

பின்னர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மட்டும் தேவாரம் அடங்கிய செப்பேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோவில் உட்புற வளாகத்தில் உலக சாதனைக்காக நடனமாடிய சுமார் 5 ஆயிரம் பரதநாட்டிய நடன கலைஞர்களின் நடனத்தை கண்டு களித்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னதாக கவர்னர் தருமபுரம் ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்பொழுது தருமபுரம் ஆதீனம் நினைவு பரிசு வழங்கினார். அப்பொழுது உதவி கலெக்டர் அர்ச்சனா, தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், வக்கீல் சேயோன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கவர்னரின் வருகையை முன்னிட்டு திருச்சி ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கவர்னரின் வருகையை முன்னிட்டு சீர்காழி பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்