ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்

ஊட்டியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-07-20 13:37 GMT

ஊட்டி

ஊட்டியில் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஆபத்தான மரங்கள்

ஊட்டி இக்கின்ஸ் சாலை எல்கில்வியூ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதி அருகில் உள்ள தனியார் பங்களாவில் வளர்ந்துள்ள பைன் மரங்கள் ஆபத்தான நிலையில் வளர்ந்து நிற்கிறது. மேலும் இந்த மரங்கள் பெரிய கிளைகளுடன் நடைபாதையை ஆக்கிரமித்து சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மரங்களின் அருகில் செல்லும் மின் கம்பங்கள் மற்றும் கம்பிகள் மீது கொடிகள், கிளைகள் பின்னிப்பிணைந்து இருக்கிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அந்த மரங்கள் சாய்ந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள், நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

வருவாய்த்துறை உத்தரவு

எல்கில்வியூ பகுதியுள்ள பிரதான சாலையோரம் ஏராளமான மரங்கள் உள்ளன‌. இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு 2 முறை புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த இடத்தில் 15 அபாயகரமான பைன் மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் காற்று அல்லது மழை காரணமாக அருகில் உள்ள மின் கம்பிகள் மற்றும் குடியிருப்புகள் மீது விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையில் 12 பைன் மரங்களை 20 அடி விட்டு வெட்டவும், 3 பைன் மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டவும் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

நடவடிக்கை

மேலும் அந்த மரங்கள் விழுந்து ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கு நில உரிமையாளர்களே பொறுப்பு என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சாலையில் உள்ள மரங்கள் வெட்டப்படவில்லை. எனவே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ள அந்த மரங்களை வெட்ட வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் இதுவரை மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் அந்த இடத்தில் உள்ள மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்