ஆபத்தான முறையில் பஸ்களில் பயணம் செய்த சிறுவர்கள்

திருவாரூரை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் பஸ்களில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் பயணம் செய்தனர்.

Update: 2023-05-27 19:00 GMT

திருவாரூர்;

திருவாரூரை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் பஸ்களில் ஆபத்தான முறையில் சிறுவர்கள் பயணம் செய்தனர்.

பஸ்களில் கூட்டம்

திருவாரூர் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மேலும் திருவாரூரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களும் உள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். குறிப்பாக திருவாரூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் திருவாரூருக்கு வந்து படித்து செல்கிறார்கள். காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர் கூலிவேலைக்கு செல்வோர் என ஏராளமான மக்கள் பஸ்களில் செல்வதால் பஸ்களில் ஏறுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது.

ேகாடை விடுமுறை

குறிப்பாக திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலம், நாகூர், பழையவலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும் பஸ்களிலும் கூட்டம் அதிகளவில் காணப்படும்.இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் மேற்கொள்கிறார்கள். படிக்கட்டுகள் மட்டுமின்றி பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகள், பின்புறம் உள்ள ஏணி படிக்கட்டுகள் ஆகியவற்றி பயணம் செய்கிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் பயணம்

இந்த நேரத்திலும் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, நன்னிலம் மார்க்கமாக செல்லும் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த நிலையில் திருவாரூரை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் ஒரு தனியார் பஸ்சில் சிறுவர்கள் சிலர் பஸ்சின் பின்பக்க ஏணியில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் இதை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மேலும் போக்குவரத்து போலீசாரும் இதனை கண்காணித்து, படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்