அழிந்து வரும் இயற்கை மணல் குன்றுகள்

வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கிராமத்தில் அழிந்து வரும் மணல் குன்றுகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-18 18:45 GMT


வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கிராமத்தில் அழிந்து வரும் மணல் குன்றுகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் குன்றுகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் கடற்கரை பகுதியில் இயற்கையாக அமைந்த மணல் குன்றுகள் இருந்தன. இதில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நட்டு அதனை தற்காலிக பணியாளர்கள் கொண்டு பராமரித்து வந்தனர். இந்த மணல் குன்றுகளும், அதிலிருந்த சவுக்கு மரங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் முறிந்து விழுந்து அழிந்தன. மேலும் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது.

கடற்கரையில் தடுப்பு அரணாக இருந்த இந்த மரங்கள் அழிந்து போனதால் கடலில் சூறைக்காற்று வீசும்போது புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே புதுப்பள்ளி கிராம கடற்கரையில் வனத்துறையினர் மூலம் மீண்டும் மரக்கன்றுகளை நட வேண்டும். மண்ணரிப்பு ஏற்படாத படி கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை அரணாக

இது குறித்து புதுப்பள்ளியை சேர்ந்த கார்த்திக் கூறும்போது:-

நாகை மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது. சுனாமி, கஜா புயல் உள்ளிட்டவை ஏற்படுத்திய பேரழிவுகளை இன்றைக்கும் மறக்க முடியாது. புதுப்பள்ளி கிராமத்தை பொறுத்தவரை கடல் சீற்றம் உள்ளிட்ட இக்கட்டான சூழ்நிலையில் கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் அரணாக இயற்கையாக அமைந்த மணல் குன்றுகள் இருந்து வந்தது. சுனாமிக்கு பிறகு புதுப்பள்ளி கடற்கரையில், சவுக்கு மரங்கள் நடப்பட்டு வனத்துறையினர் பராமரித்து வந்தனர்.

கஜா புயலுக்கு பிறகு மணல் குன்றுகளும், மரங்களும் அழிந்து விட்டன. இதனால் கடலில் பலத்த காற்று வீசும் போதெல்லாம் புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள கூரை வீடுகளும், ஆஸ்பெட்டாஸ் வீடுகளும் சேதம் அடைகின்றன. எனவே குடியிருப்புகளை பாதுகாக்கும் விதமாக புதுப்பள்ளி கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டு வனத்துறையினர் மீண்டும் பராமரிக்க வேண்டும். மேலும் மணல் குன்றுகளை பாதுகாக்கவும், கடல் நீர் ஊருக்குள் புகாமல் தடுக்கவும், கடற்கரையோரம் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்றார்.

உயிரை கையில் பிடித்துக்கொண்டு...

இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் கூறியதாவது:- கடற்கரை ஓரத்தில் எங்களது வீடு உள்ளது. கடற்கரை ஓரம் உள்ள மரங்கள் கஜா புயலில் அழிந்து விட்டதால், கடலில் வீசும் காற்று நேரடியாக எங்களது வீட்டை பாதிக்கிறது. அதேபோல மாதந்தோறும் நீரோட்டம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு பகுதி வரை வருகிறது.

அதுவே வட கிழக்கு பருவமழை காலங்களில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. புயல் காலங்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டியுள்ளது. எனவே புதுப்பள்ளி கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். குடியிருப்புகள் பாதிக்கப்படாத வண்ணம் கடற்கரையில் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்