மராமத்து பணிகள் முடிந்து தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் திறப்பு

மராமத்து பணிகள் முடிந்து தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் திறக்கப்பட்டது.

Update: 2023-06-28 18:49 GMT

பூமாலை வணிக வளாகம்

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கீழ் செயல்படும் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு, திறக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் தாந்தோணிமலை பூமாலை வணிக வளாகம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வணிக வளாகம் மராமத்து பணிகள் ரூ.8.30 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டது.

மகளிர் சுய உதவிக் குழு

இந்த வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு சுய உதவிக் குழு தொழில் முனைவோர் தன்மையை பொறுத்து மாதாந்திரம் மற்றும் அரையாண்டு அடிப்படையில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பேன்சி ஸ்டோர், ஜவுளி ரெடிமேட்ஸ், ஜெராக்ஸ், சிறுதானிய சிற்றுண்டி வகைகள், மாவு, எண்ணெய், உணவகம், செட்டிநாடு பலகாரங்கள், கைவினை பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், தையற்கடை, ஆரிவொர்க், மூங்கில் நாற்காலிகள் போன்றவை கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்