கூடலூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ தொழிலாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
கூடலூர் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ தொழிலாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
கூடலூர்
கூடலூரை அடுத்த பாண்டியார் தேயிலை கோட்ட அலுவகம் முன்பு டேன்டீ ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். டேன்டீ ஊழியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைவர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செவ்விளம்பரிதி மற்றும் பொதுச் செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகம் (டேன்டீயில்) பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் காலமுறை ஊதியம். கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் காலம் தாழ்த்ததப்பட்டு வருகிறது. ஏழாவது ஊதியக்குழு அகவிலைப்படி மற்றும் ஆறாவது ஊதியக்குழு அறிவித்த நிலுவையில் உள்ள 14. சதவீத அகவிலைப்படி ஆகியவற்றை வழங்கக்கோரி பல ஆண்டுகளாக நிர்வாகம், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் பணி முடித்த பின் மாலையில் கருப்பு பட்டை அணிந்து வால்பாறை, கோத்தகிரி, குன்னூர், நடுவட்டம், பாண்டியார், சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம் கோட்ட அலுவகங்கள் மற்றும்குன்னூர் தலைமை அலுவலகம் முன்பாகவும் கண்டனூர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து ஊழியர்களும் திரண்டு வரும் 17-ந்தேதி குன்னூர் தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.