டேன்டீயை தமிழக அரசே நடத்த வேண்டும்

டேன்டீயை தமிழக அரசே நடத்த வேண்டும் என பந்தலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

Update: 2023-01-18 18:45 GMT

பந்தலூர், 

டேன்டீயை தமிழக அரசே நடத்த வேண்டும் என பந்தலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

வேலை வழங்க மறுப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை(டேன்டீ) வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்தும், டேன்டீயில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில், கண்டன பொதுக்கூட்டம் பந்தலூர் பஜாரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:-

56 ஆண்டுகளுக்கு முன்பு லால்பகதூர்-சிறிமாவோ ஒப்பந்தத்தின்படி 15 லட்சம் மக்கள் தாயகம் வந்தனர். அன்றைக்கு 1 ஏக்கர், ஒரு வீடு அவர்களுக்கு வழங்கி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 அரசுகளின் நிர்வாக சீர்கேட்டால் டேன்டீ நிர்வாகம் நலிவடைந்து விட்டது. தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுக்கப்படுகிறது. ஆனால், போதிய தொழிலாளர்கள் இல்லை என பல்வேறு காரணங்களை அரசு கூறி வருகிறது.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

வனப்பகுதியில் எங்கு பார்த்தாலும் தேக்கு மரங்கள் உள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு எந்த பயனும் இல்லை. வரும் வழியில் சாலையோரம் குரங்குகள் கூட்டமாக நின்று உணவு கிடைக்குமா என பிச்சை எடுப்பது போல் நிற்கிறது.

வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகளை வனத்தில் பெருக்க நடவடிக்கை எடுப்பதில்லை. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தினச்சம்பளம் ரூ.425.50 வழங்க வேண்டும். டேன்டீ தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைத்தால் 2 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

தொடர் போராட்டம்

டேன்டீயை அவ்வளவு சீக்கிரத்தில் வனத்துறையிடம் ஒப்படைக்க விடமாட்டோம். நான் வரும் வழியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகளை புதுப்பிக்க முடியவில்லை. ஆனால், 8 வழிச்சாலையை அமைக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது. சொந்த விமானங்கள் இல்லாத நிலையில் எதற்காக பரந்தூரில் ரூ.5 ஆயிரம் கோடியில் விமான நிலையம் கட்ட வேண்டும். டேன்டீ தோட்டங்களை அரசே நடத்த வேண்டும்.

தொழிலாளர்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது. தொழிலாளர்களின் உழைப்பால் லாபகரமாக இயங்க முடியும். இதை மீறி வனத்துறையிடம் ஒப்படைத்தால் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும். அவ்வாறு வனத்துறையிடம் டேன்டீயை ஒப்படைத்தால் ஒரு நாள் அது திருப்பி எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஹீமாயூன், சாட்டையடி துரைமுருகன் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் பேசினர். கூட்டத்தில் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்