வீட்டுக்கு தாமதமாக வருவதை தந்தை கண்டித்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தூக்கில் தொங்கினார்

வீட்டுக்கு தாமதமாக வருவதை தந்தை கண்டித்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அதிர்ச்சியில் அவரது தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-06 09:31 GMT

சென்னை வியாசர்பாடி கரிமேடு 2-வது தெருவைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர், ஆயிரம்விளக்கு பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி இளவரசி (வயது 50). இவர்களுடைய மகன் சுசில் (21). இவர், பி.காம் படித்து முடித்துவிட்டு தற்போது எம்.கே.பி. நகர் மற்றும் கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியில் உள்ள நடன பள்ளியில் நடன பயிற்சியாளராக வேலை செய்து வந்தார்.

சுசில், நடன பயிற்சி முடிந்து இரவு நேரங்களில் தாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனை ரகுநாதன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுசில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் இருந்த மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அதிர்ச்சியில் இளவரசியும் அதே மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி. நகர் போலீசார் தற்கொலை செய்த தாய்-மகன் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகன் தற்கொலை செய்த அதிர்ச்சியில் தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்