டேன் டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்றக்கூடாது- தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை
டேன் டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
குன்னூர்
டேன் டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
நஷ்டம்
தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்விற்காக டேன் டீ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நீலகிரி மாவட்டத்திலும், கோவை மாவட்டம் வால்பாறையிலும் செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
டேன் டீ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேயிலை சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க டேன் டீ நிறுவனத்தால் இயலாமல் போனது. இதனால் 240 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் எதிர்ப்பு
இதனை தொடர்ந்து நிர்வாக வசதிக்காக நிலங்களின் சில பகுதிகளை வனத்துறைக்கு மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. டேன்டீ நிறுவனத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க கூடாது என்று தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக தொழிலாளர்கள் கூறி வருகின்றனர். எனவே தாயகம் திரும்பிய தமிழர்களான டேன் டீ தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் டேன்டீ நிறுவனத்தை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் தமிழக அரசே நடத்த வேண்டும் என்றும் ஒட்டு மொத்த தொழிலாளர்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.