எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

எல்லீஸ்சத்திரம், தளவானூர் அணைக்கட்டுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-07-12 17:01 GMT


விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள், கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் சரிவர வழங்குவதில்லை. தோட்டக்கலைத் துறையின் மூலம் மூலிகை பயிர்களை பயிரிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் எந்தெந்த பயிர்களை எந்தெந்த முறையில் பயிரிட வேண்டும் என்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவில்லை.

உரத்தட்டுப்பாடு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பதிவு செய்யும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்து நகர்வு செய்ய வேண்டும். தற்போது சிலர், போலி சிட்டா, அடங்கல் கொடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்கின்றனர். எனவே அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் யூரியா உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

மழைக்காலம் வர உள்ளதால் ஏரிகளில் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து ஓராண்டு காலம் ஆகிறது. அதுபோல் தளவானூர் அணைக்கட்டும் சேதமாகி உள்ளது. இந்த 2 அணைக்கட்டுகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும்.

நெல் விதைகள்

தற்போது பசுமை தீர்ப்பாயம் 43 இடங்களில் மணல் அள்ள அனுமதியளித்துள்ளது. எந்த காரணத்தை கொண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் மணல் அள்ள ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சம்பா சாகுபடிக்கு நெல் விதைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கரும்பு பயிரில் மருந்து தெளிக்க வசதியாக டிரோன்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை கேட்டறிந்த கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்றார். இக்கூட்டத்தில் தாசில்தார்கள் ஆனந்தகுமார், கணேசன், பாஸ்கரதாஸ், கார்த்திகேயன் மற்றும் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்