'சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்'

‘சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்’ என்று திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடியிடம் மலைக்கிராம மக்கள் புகார் கொடுத்தனர்.

Update: 2023-07-17 20:00 GMT

சேதமடைந்த தார்சாலை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி, செம்ரான்குளம் ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் சார்பில் கோடை குறிஞ்சி பெண்கள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாச்சலூரை அடுத்த கடைசிக்காடு முதல் வடகவுஞ்சி, பெரும்பள்ளம் வரை அமைக்கப்பட்ட தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் கர்ப்பிணியை கூட அந்த வழியாக ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே சாலையை விரைவாக சீரமைத்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

போலீஸ் அதிகாரிகள்

இதேபோல் ஒட்டன்சத்திரம் தாலுகா பொருளூர் கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த 12-ந்தேதி அவருடைய ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புகார் கொடுக்க சென்ற விக்னேஷ்குமாரின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் மிரட்டுகின்றனர். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பா.ஜ.க. திண்டுக்கல் மேற்கு ஒன்றிய தலைவர் காளியப்பன் கொடுத்த மனுவில், சீலப்பாடி ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முறையாக நடைபெறவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால், ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

185 மனுக்கள்

வனவேங்கைகள் கட்சி நிர்வாகிகள் சார்பில் கொடுத்த மனுவில், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 185 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்