சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும்

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-15 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சேதமடைந்த நடைபாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாற்றின் குறுக்கே...

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் உள்ளது கிளியனூர் மாதாகோவில் கிராமம். இந்த கிராமத்திற்கும், புனவாசல் கிராமத்திற்கும் இடையே வெண்ணாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் கட்டப்பட்டது.

இந்த பாலத்தினை கிளியனூர் மாதாகோவில் தெரு, புனவாசல், சாத்தனூர், பழையனூர், அழகியநாதன்கோம்பூர், வடபாதிமங்கலம், காக்கையாடி, ஓவர்ச்சேரி, பழையகாக்கையாடி, வேற்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த நடைபாலம்

மேலும் கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் இந்த நடைபாலத்தை கடந்து தான் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைபாலம் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக நடைபாலத்தில் அமைக்கப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

இதனால் பாலத்தில் நடைபாதையில் இடிந்து விழுந்த சிமெண்டு சிலாப்புகளுக்கு பதிலாக மரக்கம்புகள் அமைக்கப்பட்டது. ஆனாலும் பாலத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த பாலத்தை சீரமைத்துதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுமாறி கீழே விழுகின்றனர்

இது குறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த பீட்டர் கூறுகையில்:- மாதாகோவில் கிராமமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலமாக இந்த நடைபாலம் இருந்து வருகிறது. மன்னார்குடி, திருவாரூர், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுக்கு சென்று வருவதற்கு பஸ் நிறுத்தம் செல்வதற்கு மற்றும் கடைவீதி போன்ற இடங்களுக்கு சென்று வருவதற்கு இந்த நடைபாலம் மட்டுமே உதவியாக உள்ளது.

ஆனால் பாலத்தின் சிமெண்டு சிலாப்புகள் இடிந்து விழுந்து அந்த இடத்தில் மரக்கம்புகள் அமைக்கப்பட்டது. என்றாலும் சிறுவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த மரக்கம்புகள் மீது நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இரவு நேரங்களில் வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரமைக்க வேண்டும்

கூத்தாநல்லூரை சேர்ந்த ஜஸ்டின்:- சேதமடைந்த நடைபாலம் என்பது உள்ளூர் மற்றும் வெளியூர் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நடைபாலமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பாலத்தை கடந்து தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் ஏனைய இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

மேலும் வடபாதிமங்கலம் மற்றும் சாத்தனூர், பழையனூர் போன்ற இடங்களில் உள்ள அங்கன்வாடி பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் சிமெண்டு சிலாப்புகள் இடிந்து விழுந்ததால் பள்ளி மாணவர்கள் உட்பட கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நடைபாலத்தை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்