பூச்சிகள் தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூச்சிகள் தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-04 20:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் பூச்சிகள் தாக்குதலால் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.

சப்போட்டா மாம்பழங்கள்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களில் அதிக அளவு மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு தனி மவுசு உண்டு. இங்கு விளையும் சப்போட்டா மாம்பழங்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது.

தற்போது மாம்பழ சீசன் தொடங்க உள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு மா மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்திருந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பருவநிலை மாற்றம்

இந்தநிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் சாரல் மழை, பூச்சிகள் தாக்குதல் காரணமாக மரத்தில் பூத்திருந்த பூக்கள் அனைத்தும் கருகி உதிர்ந்து போய் விட்டது. இதனால் மகசூலில் பாதிப்பு ஏற்பட்டது. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இவை எல்லாம் மீறி ஒரு சில இடங்களில் மாங்காய் விளைந்தாலும் தத்துப்பூச்சி, அந்து பூச்சி, இலைப்பேன் ஆகியவற்றின் தாக்குதலினால் மாங்காய்களுக்கு நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் வேதனை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பருவநிலை மாற்றம் மற்றும் பூச்சிகள் மாமரங்களை தாக்கி உள்ளது. இதனால் மாமரங்களில் பூத்திருந்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விட்டன. ஒரு சில இடங்களில் காய்த்திருந்த மாங்காய்களும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.

ஏற்கனவே கடன் பட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே விவசாயம் செய்து வரும் நிலையில் இவ்வாறு நோய் பாதிப்பு ஏற்பட்டு பூக்கள் உதிர்ந்து உள்ளது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திலகவதி, பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் விமலா, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கண்ணன், சித்திரைச் செல்வி ஆகியோர் பாதிப்பு அடைந்த மா மரங்களை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்